Wednesday, May 7, 2025

 எதிரணியின்   பலகீனங்களை அம்பலப்படுத்திய மே தினம்..!


சர்வதேச  மே தினம் எதற்காக, யாருக்காக அனுஷ்டிக்கப்படுகின்றது என்ற கேள்வி இன்று அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.    மே தினத்தின் தாற்பரியங்களை மறைத்து    முழுக்க முழுக்க அரசியல் நிகழ்வாகவே உழைப்பாளர் தினத்தை மாற்றியமைத்த பெருமை இலங்கையின்  பாரம்பரிய கட்சிகளுக்கே உள்ளது.  ஆனால்  உழைக்கும் வர்க்கத்தினரின் தோழர்கள் என்றும் தொழிற்படையின் மூலமே  நாட்டை கட்டியெழுப்பலாம் என்ற கோஷங்களோடு ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தியும் இம்முறை மே தினத்தை அரசியல் நிகழ்வாகவும்  உள்ளூராட்சி  தேர்தலின் பிரசார களமாகவும் பயன்படுத்திக் கொண்டதையும் மறுக்க முடியாது.

 

இலட்சக்கணக்கானோரின் பிரசன்னத்துடன் காலி முகத்திடலை செந்நிறமாக்கிய தேசிய மக்கள் சக்தியானது இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரின் பிரச்சினைகளையும் அவர்களின் எதிர்கால சவால்கள் பற்றியும் காத்திரமாக எதையும் பேசவில்லை. ஆனால்  தமக்கு இன்னும் மக்கள் பலம் உள்ளது என்ற செய்தியை எதிரணியினருக்கு உணர்த்தி அவர்களை மக்கள் மத்தியில் மேலும் பலவீனமாக்கியுள்ளனர் என்று தான் கூற வேண்டியுள்ளது.

 அதே வேளை எதிர்க்கட்சிகளும் மே தினத்தின் தாற்பரியம் உணர்ந்து அதை அனுஷ்டிக்காது, ஆளும் கட்சியினருக்கு எதிரான அரசியல் கூட்டங்களாக  அதை  நடத்தி முடித்துள்ளன.  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு  தலைநகரில் தனது மே தின நிகழ்வை நடத்த முடியவில்லை. ஆரம்பத்தில் குருணாகலில்  மே தினத்தை நடத்துவதற்கான பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்த தமிழ் முற்போக்குக் கூட்டணி தலவாக்கலையில் ஏற்பாடு செய்த மே தின நிகழ்விலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். உண்மையில்  தலவாக்கலை கூட்டம்  ஐக்கிய மக்கள் சக்தியினது மேதின கூட்டமா அல்லது தமிழ் முற்போக்குக் கூட்டணியுடையதா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் உள்ளது.

 இந்நிகழ்வில் பதுளை ,கண்டி, இரத்தினபுரி ஆகிய பகுதிகளிலிருந்து கணிசமான  ஆதரவாளர்கள் பஸ்களில் வருகை தந்து கூட்டத்தில்  கலந்து கொண்டிருந்தாலும் நுவரெலியா மாவட்ட மக்களின் பிரசன்னமே அதிகமாக இருந்தது. எதிரணி வரிசையில்  பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திர கட்சியினர் தனித்தனியாக  தலைநகரில் மே தின கட்டங்களை  ஏற்பாடு செய்திருந்தனர். எனினும் பிரதான எதிர்க்கட்சியான  ஐக்கிய மக்கள் சக்தியின் பலகீனம் இம் மேதினத்தில் நன்கு வெளிப்பட்டது எனலாம். எதிர்கட்சி  தலைவர் என்ற வகையில் எப்போதும்  உறுதியான அழுத்தமான கருத்துக்களை முன்வைக்காதவர்  என்ற குறைபாடு சஜித்துக்கு உள்ளது. தலவாக்கலை  மே தினத்திலும் அவ்வாறே அவரது உரை அமைந்தது.

 ‘ எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்க அணி திரளுங்கள் ‘ என அவர் இங்கு பேசிக்கொண்டிருக்க, தலைநகரில் இலட்சக்கணக்கில்  திரண்ட  தேசிய மக்கள் சக்தியினர்  காலி முகத்திடலையே சிவப்பு நிறமாக்கி விட்டனர். இங்கு உரையாற்றிய  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்து தலைவர் திகாம்பரம் எம்.பி  ‘உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதன் மூலம்  சஜித்தின் கரங்களைப் பலப்படுத்துவோம் ‘ என்றார். ஆக இப்போதைய நிலைமையில் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவது கூட தமக்கு சவாலான இலக்கு என்பதை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள கூட்டணிகளும் விளங்கிக்கொண்டுள்ளன.

 இதே வேளை மலையகத்தின் பிரதான மற்றுமொரு கட்சியான  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பிரதேச ரீதியான  மே தின கூட்டங்களை ஏற்பாடு செய்து தமது ஆதரவாளர்களிடம் தேர்தல் பிரசாரங்களையே முன்னெடுத்திருந்தது. உள்ளூராட்சித் தேர்தல்களை  கவனத்திற்கொண்டே இம்முறை மே தின நிகழ்வுகளானது பிரதேச ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றது என இ.தொ.காவும் அறிவித்திருந்தமை முக்கிய விடயம்.

 ராஜபக்ச சகோதரர்களின் அடையாளமாக இருந்து அவர்களை உச்சத்துக்கு கொண்டு சென்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு  தலைமை தாங்கிய நாமல் ராஜபக்வின் உரையும் அநுர அரசாங்கத்துக்கு எதிரானதாக இருந்தது மாத்திரமல்லாது, தனது தந்தை மகிந்த மீது அநுர அரசு சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்திலிருந்தும் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக தனது குடும்ப அரசியல் பிரச்சினைகளையே மே தின மேடையில் பேசியிருந்தார்.

 இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ் மண்ணின் காணி ஆக்கிரமிப்பு பற்றி கருத்துத் தெரிவித்திருந்தார்.  ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களுக்கு வழங்குவோம் என ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம் அதைச்செய்யாமல்  காணிகளை ஆக்கிரமித்து வருகின்றது. இந்நிலை தொடர்ந்தால் யாழ் மண்ணில் ஜனாதிபதி கால வைக்க முடியாத நிலையை ஏற்படுத்துவோம்’  என்று உரையாற்றியிருந்தார். ஆனால் அன்றைய தினமே அநுர அரசாங்கம் தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ள  40 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுத்தித்திருந்தது. தமிழரசுக்கட்சி இப்படியெல்லாம் பேசும் எனத் தெரிந்து அரசாங்கம்  இப்படி  நடந்து கொள்கின்றதா அல்லது  காணி விடுவிப்பு அறிந்து வைத்திருந்து  சுமந்திரன் அவ்வாறு பேசினாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

 எனினும் தேசிய மக்கள் சக்தியின் தலைநகர் மே தினக் கூட்டம் நாட்டு மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இத்தனை காலமும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அதிக எண்ணிக்கையான மக்களை ஒன்று திரட்டி மே தின கூட்டங்களை நடத்திய  மக்கள் விடுதலை முன்னணி,  முதன் முறையாக  அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர்  தேசிய மக்கள் சக்தியாக பரிணமித்து அதிக எண்ணிக்கையான மக்களை ஒன்று திரட்டி வெற்றிகரமான மே தினத்தை அனுஷ்டித்துள்ளது.  

 தற்போதைய அரசாங்கத்தை ‘எல் போர்ட்’ என வர்ணித்த ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி மே தின கூட்டங்களை நடத்தவில்லை. அவர்களின்  அமைப்பாளர்கள்  உள்ளூராட்சி சபை வேட்பாளர்களுடன் பிரதேச ரீதியாக  மக்களிடம் சென்று தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினர். மேலும் தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தை ஊடகங்களின் முன்பாக விமர்சித்தும் குறை கூறியும் வரும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தமது கட்சிகளின் ஊடாக மே தினத்தை நடத்தாத  அதே வேளை, வேறு கட்சிகளின்  மே தின நிகழ்வுகளிலும் பங்குகொள்ள வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

 தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிரணியினருக்கு மாத்திரமல்லாது நாட்டு மக்களுக்கும் ஒரு செய்தியைக் கூறியுள்ளார். தற்போது நாட்டில் அரசியல் இயக்கமாக இருப்பது நாம் மாத்திரமே என்று வலிறுத்திய அவர் நாட்டின் ஏனைய கட்சிகள் அனைத்தும் சிதறிப் போய்விட்டன என்றார். அதன் காரணமாகவே நாட்டின் எதிர்காலம் எங்கள் கைகளில் உள்ளது என்பதை அவர் நாட்டு மக்களுக்கு தைரியமாக அறிவித்திருந்தார். ஆட்சியிலிருக்கும் போது எதிரணி உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்து அவர்களுக்கான சலுகைகளை வழங்கி பிரித்தாளும் தந்திரங்களை முன்னெடுத்த  மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின்  கட்சிகள் இன்று சிதறிப்போயுள்ளன. மே தின நிகழ்வுகளைக் கூட  நடத்த முடியாமல் அவை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

 தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்த பின்னர் நடத்திய முதலாவது மே தினத்தில்  மக்கள் இன்னும் தம்பக்கம் என்பதை வெளிப்படுத்திய அதே வேளை எதிரணியினரின் பலவீனத்தை அப்பட்டமாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

 

Wednesday, April 23, 2025

 

உயிர்களை  அலட்சியப்படுத்துதல்…!

மருத்துவ அலட்சியப்படுத்தல்கள் செயற்பாடானது  (Medical negligence) விலை மதிப்பில்லாத  உயிர்களை  காவு கொள்ளும் நிலைமைகளை எமது நாட்டில் தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாக  சிறுவர் பெரியோர் என்ற பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினரும்  இன்று எமது நாட்டின் மருத்துவ கட்டமைப்பு  மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர். வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு தயக்கத்தோடு கூடிய அச்சத்தை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.   இலங்கையின் சுகாதாரத் துறையின் நம்பகத்தன்மையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இறை நம்பிக்கையுள்ளவர்கள் தாம் நம்பும் கடவுளுக்கு அடுத்து  கையெடுத்து வணங்கும் பிரிவினராக வைத்தியர்களே காணப்படுகின்றனர். ஆனால் தற்காலத்தில் உயிர்களை காக்கும் மருத்துவத் தொழிலை கற்று உறுதிமொழி எடுத்து பணிபுரியும் சில மருத்துவர்கள் அது குறித்த அக்கறையின்றி செயற்படுவது மிகவும் பாரதூரமான செயலாகும்.  

இதற்குப் பிரதான காரணம் மருத்துவ அலட்சியப்படுத்தல்கள் குறித்த சம்பவங்கள் அரசாங்கத்தினாலும் அலட்சியப்படுத்தப்பட்டு வருவதாகும். பாதிக்கப்பட்ட தரப்பினரின் குரல்களை வலுவிழக்கச்செய்யும் வகையில்   சரியான காரணங்களை கூறாது இழுத்தடிப்பு செய்து வரும் அதே வேளை, பாதிப்புக்கு காரணமான மருத்துவர்களையும் அல்லது மருத்துவ குழுவினரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைக்கும் முயற்சியிலேயே மருத்துவ துறையினரும்   ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  தரம் ஒன்று பயிலும் மாணவி ஒருவரின் பரிதாப மரணம் மருத்துவ அலட்சியப்படுத்தல் வரிசையில் பத்தோடு பதினொன்றாக சேர்க்கப்பட்டு விட்டதே தவிர அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. மரணமான சிறுமியின் தந்தையின் கதறல்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. காய்ச்சல் காரணமாக தனது மகளை மேற்படி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார் அவரது தந்தை. சிறுமியை பரிசோதித்த மருத்துவர், மருத்துவமனை மருந்தகத்தில் ஒரு மாத்திரயை வாங்கி வரும்படி கூறியுள்ளார். அதன் பிறகு சிறுமி அனுமதிக்கப்பட்டதுடன் எக்ஸ்ரே  பரிசோதனை மற்றும் இரத்த மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டு சேலைன் ஏற்றப்பட்டுள்ளது. மருத்துவர் சிபாரிசு செய்த மாத்திரையுடன் பனடோல் மாத்திரயும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இரவில் சிறுமியின் உடல் நிலை மிக மோசமடைந்துள்ளது. அவர் அன்றிரவே கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் மறுநாள் அச்சிறுமி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கே தவறு நடந்தது எனத் தெரியாமல் அச்சிறுமியின் பெற்றோர்கள் உறவினர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றனர். மருத்துவர்களின் அலட்சியப்போக்கினால் உயிரிழந்த பலரின்  குரல்கள்  வெளிவராமலேயே உள்ளன. ஏனென்றால் ஏழை பெற்றோர்களால் இதற்கு தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது. அவர்களின் பேச்சு அம்பலத்தில் ஏறுவதில்லை. ஓரளவுக்கு பண வசதி கொண்ட பெற்றோர்கள் நீதிமன்ற வாசலை மிதித்தாலும் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி சில மருத்துவர்கள் தம்மை நிரபராதி என நிரூபித்து விடுவர், அல்லது நாட்டை விட்டு தப்பிச்சென்று விடுவர். மேற்படி மருத்துவ அலட்சியப்படுத்தல் சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய இலங்கை மருத்து சங்கமும் அமைதி காப்பது வேதனையானது.

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் தமது மூன்று வயது மகனைப் பறிகொடுத்த    பெற்றோரின் கதை இது. அவ்வாண்டு டிசம்பர் மாதம் தமது மகனின் சிறுநீரக பிரச்சினைக்காக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதித்துள்ளனர் பெற்றோர். பரிசோதனை அறிக்கைகளின் பிரகாரம் சிறுவனின் இடது சிறுநீரகம் சரியாக செயற்படவில்லை. ஆனால் வலது சிறுநீரகம் சாதாரணமாக செயற்படுவதை அறிக்கைகள் உறுதி செய்தன. எனினும் அறுவை சிகிச்சைக்குப்பிறகு சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது. இது குறித்து பெற்றோர் மருத்துவர்களிடம் கேட்ட போது ஏதேதோ காரணங்களை கூறி சமாளித்த அவர்கள் இறுதியில் தவறுதலாக இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டுள்ளதை கூறியுள்ளனர். அதை காட்டும்படி பெற்றோர் கேட்டும் அது சாத்தியப்படவில்லை. இறுதியில் 2023 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அச்சிறுவன் மரணத்தைத் தழுவியுள்ளார்.

மிகுந்த அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிய பெற்றோர்   நீதியின் மீது நம்பிக்கை வைத்து மருத்துவமனை நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது குறித்த சிறுவனின் மரணத்துக்குக் காரணமான சகலரையும் கைது செய்யும்படி நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இதன் பிறகு இலங்கை மருத்துவ சங்கமானது குறித்த சம்பவத்துக்கு காரணமான வைத்தியரின் மருத்துவ பதிவை  எட்டு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இருப்பினும் குறித்த வைத்தியர் அச்சம்பவத்துக்குப்பிறகு அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து விட்டார். சிறுவனின் மரணத்துடன் தன்னை தொடர்பு படுத்தும் அறிக்கைகள் ஆதாரமற்றவையென்றும் குறித்த சத்திர சிகிச்சைக்கு முன்பே தான் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதாகவும் அவர் தன் பக்க நியாயத்தை வெளிப்படுத்தினார்.

இங்கு எழுந்துள்ள பிரச்சினை என்னவெனில் மருத்துவ அலட்சியப்படுத்தல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் முதலில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு எவ்வாறான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் இருப்பதாகும். இதனால்  குற்றமிழைத்தவர்கள்  நாட்டிலிருந்து தப்பிச்செல்லும்  அதே வேளை அவர்களைப் பற்றிய தரவுகளும் வைத்தியசாலை மட்டத்திலேயே மறைக்கப்படும் அல்லது அழிக்கப்படும் சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன.

சுகாதார அமைச்சராக பொறுப்பான பதவியிலிருக்கும் போதே கெஹலிய ரம்புக்வெல தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரத்தில் சிக்கி பதவியிழந்து இன்று வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டிருக்கின்றார். மக்களின் உயிர்கள் மீது பொறுப்பு கூற வேண்டிய அமைச்சரே இவ்வாறு இருக்கும் போது சுகாதார கட்டமைப்பின் மீது மக்கள் அச்சப்படுவதில் நியாயம் உள்ளது. ஊழல்களுக்கு எதிரான போக்கை பிரதானமாகக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மருத்துவ அலட்சியப்படுத்தல்கள் பற்றி அதிக அக்கறை கொள்ள வேண்டும் 

Monday, April 14, 2025

 பிரதேச சபைகள் திருத்தச் சட்டத்தை 

எத்தனை மலையக கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன?

 

மலையக பெருந்தோட்ட மக்களை செறிவாகக் கொண்டிருக்கக் கூடிய மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அமைந்துள்ள உள்ளூராட்சி சபைகளான பிரதேச சபைகளுக்கு அதிகளவில் பெருந்தோட்ட மக்களே தமது வாக்குகளை அளித்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு வரை அவ்வாறு வாக்களித்த மக்களுக்கு ஒரு சதத்தையேனும் பயன்படுத்த முடியாத கட்டுப்பாடுகளை பிரதேச சபைகள் கொண்டிருந்தன.

ஆனால் மேற்படி பிரதேச சபைகளுக்குள் வரும் கிராமப்புற அபிவிருத்திக்கு பிரதேச சபை நிதியை பயன்படுத்துவதில் எந்த சட்டச் சிக்கல்களும் இருக்கவில்லை. இந்த பாகுபாட்டை கருத்திற்கொண்டு பல சுற்று பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்களின் இறுதியிலேயே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 2018 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிரதேச சபைகள் (திருத்தச்) சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அப்போது அமைச்சுப்பதவிகளைக் கொண்டிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளும் அவர்களின் ஆலோசகர்களாக இருந்தபு த்திஜீவிகளும் தமது பங்களிப்பை நல்கியிருந்தனர்.

அதன் படி மலையகப் பகுதிகளில் உள்ள பிரதேச சபைகள் தமது எல்லைக்குட்பட்ட பெருந்தோட்ட பிராந்தியங்களில் சில உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள தமது நிதிகளை பயன்படுத்துவதற்கு முப்பது வருடங்களாக இருந்து வந்த தடைகள் நீங்கின.

குறித்த திருத்தச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பதாக பிரதேச சபை நிதியை சட்ட வரம்புகளை மீறி தோட்டப்பகுதி அபிவிருத் திக்கு பயன்படுத்தியது தொடர்பில் எழுந்த சர்ச்சையால் உடபலாத்த பிரதேச சபையானது 2008 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவால் கலைக்கப்பட்டமை ஒரு வரலாற்று சம்பவமாகும். அவ்வாறு உடபலாத்த பிரதேச சபை கலைக்கப்பட்டமைக்கு முன்வைக்கப்பட்ட காரணங்களாக அச்சபையின் நிலவரம்புக்கு உட்பட்ட நியூபீக்கொக்,செல்வகந்த,மெல்போர்ட் ஆகிய தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளாகும்.

பிரதேச சபைகளை விஸ்தரிப்பின் ஊடாகவே மக்களுக்கு சேவைகளையும் அதிகரிக்க முடியும் என்ற கோரிக்கை நல்லாட்சி காலத்தில் எழுந்ததால் நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக நான்கு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்துமே பெருந்தோட்டப்பகுதியை உள்ளடக்கிய சபைகளாகும். கொட்டகலை பிரதேச சபை, அக்கரபத்தனை பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை , மஸ்கெலியா பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி நிறுவனங்களின் நிலப்பரப்புகள் பெருந்தோட்டப்பகுதிகளை அதிகமாகக் கொண்டவை. நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளும் அவ்வாறே. ஆனால் பிரதேச சபை திருத்தச்சட்டம் தடையாக இருந்ததால் அச்சந்தர்ப்பத்தில் நிதியைப் பயன்படுத்த முடியவில்லை.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல்களின் பின்னர் இந்த திருத்தச் சட்டமூலத்தை பயன்படுத்தி மேற்படி பிரதேச சபைகள் எத்தனை தோட்டப்பிரதேசங்களுக்கு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றன என்பதை குறித்த தோட்டப்பகுதி மக்களே ஆராய வேண்டும்.

சில பிரதேச சபைகளின் உறுப்பினர்களாக வெற்றி பெற்று வந்தவர்கள் அப்பிரதேசத்தின் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளாவர். ஆனால் அவர்களால் பிரதேச சபை நிதியின் மூலம் வடிகாண்களை அமைக்கவோ அல்லது தோட்டத்திலுள்ள மைதானத்தை சுத்தப்படுத்தக் கூட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. இதற்குக் காரணம் தோட்ட நிர்வாகம் இழுத்தடிப்புகளை செய்ததாகும். தோட்ட நிர்வாகம் ஏன் இதில் தலையிட வேண்டும் என்ற கேள்வி எழலாம். திருத்தச் சட்டத்தின் (2) உட்பிரிவு இவ்வாறு கூறுகின்றது;

  'பெருந்தோட்டப் பிராந்தியங்களின் விடயத்தில்,  பிரதேச சபைகள் விசேட தீர்மானமொன்றை சேர்த்துக் கொண்டதன் மேல் அத்துடன் இயைபான தோட்டத்தின் நிருவாக அதிகாரிகளுடனான கலந்தாலோசனையுடனும், அந்தந்த பெருந்தோட்ட பிராந்தியங்களில் வதிவோரின் சேமநலனுக்கென அவசியமான வீதிகள், கிணறுகள் மற்றும் வேறு பொது வாழ்வசதிகளை அத்தகைய வதிவோருக்கு வசதியளிப்பதற்கு பிரதேச சபை நிதியத்தை பயன்படுத்தலாம்.'


தோட்ட நிர்வாக அதிகாரிகள் என்றால் முகாமையாளர்களே விளங்குகின்றனர். சில தோட்டப்பகுதிகளின் முகாமையாளர்கள் கடும்போக்குக் கொண்டவர்களாக விளங்கியதால் உறுப்பினர்களால் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணிகளை கூட முன்னெடுக்க முடியவில்லை. இதற்குப் பின்னணியில் பல காரணங்கள் இருந்தன.

சபைகளில் ஆட்சியமைத்த கட்சியானது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தோட்டப்பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை செய்வதற்கு தடையாக இருந்தமை முக்கியமானது. இதற்குப் பல உதாரணங்களை காட்டலாம். தோட்ட முகாமையாளர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்க வேண்டாம் என மறைமுகமாக கூறப்பட்டது.

ஆனால் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருந்த கட்சியின் உறுப்பினர்கள் தமது தோட்டப்பகுதிகளில் அபிவிருத்திகளை தங்கு தடையின்றி முன்னெடுத்தனர். பலர் தமது குடியிருப்புகளுக்கு முன்பாக செல்லும் வீதிகளை கொங்றீட் இட்டு செப்பனிட்டது மாத்திரமின்றி வடிகாண்களையும் ஸ்திரமாக அமைத்துக்கொண்டனர்.

பெயருக்காக தமது தோட்டத்தின் சில வடிகாண்களை சிறிது தூரத்துக்கு அமைத்துக்கொண்டதுடன் வீதிகளை அரைகுறையாக செப்பனிட்டு படம் காட்டினர்.

இதற்கும் பல ஆதாரங்களை காட்டலாம்.பிரதேச சபையின் நிதியை தோட்டப்பகுதிக்கு பயன்படுத்தலாம் என்ற விடயத்தை சில உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களுக்கே மறைத்து செயற்பட்டனர். சில திட்டங்களை தமது கட்சித் தலைவர்,  செயலாளரின் தனிப்பட்ட நிதி ஒதுக்கீடு என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்து கொண்டனர். இந்த செயற்பாடுகளை எதிர்வரும் தேர்தல்களுக்குப்பிறகு அமையப்போகும் சபைகளின் உறுப்பினர்கள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பது மக்களினதும் கருத்தாக உள்ளது. பிரதேச சபை நிதியின் மூலம் தமது குடியிருப்பு பாதைகளை செப்பனிட்டு கொண்டவர்களும் வடிகாண்களை அமைத்துக் கொண்டவர்களும் இ தமது காணிகளை பெக்கோ இயந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தியவர்களும் புதிய சபையின் ஆட்சிக்கு முன்பதாக பதில் கூற வேண்டிய நிலைமைகள் ஏற்படலாம். அநேகமாக மேற்படி சபைகளின் கடந்த கால ஆட்சியின் நிதி பயன்பாடுகள் பற்றிய கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது முக்கிய விடயம்.

அதன் போது பிரதேச சபையின் நிதியைப் பயன்படுத்தி தோட்டப்பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் பற்றிய உண்மைத் தகவல்கள் வெளிவரக்கூடும். அவற்றை முறைகேடாக பயன்படுத்திய பிரதிநிதிகள் இம்முறை தெரிவு செய்யப்பட்டாலும் படாவிட்டாலும் அவர்கள் சட்டத்துக்கு பதில் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இது ஊழலுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி என்பதையும் மறந்து விடக் கூடாது.

சிவலிங்கம் சிவகுமாரன்

Sunday, April 13, 2025

 போர்க்குற்றங்களுக்கு அப்பால் ….!


 

சி.சிவகுமாரன்

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றங்கள்  விசாரிக்கப்படவேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. யுத்த காலகட்டத்தை தவிர்த்துப் பார்க்கும் போது, இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பாரதூரமானவையாக விளங்குகின்றன. குறிப்பாக  பாதாள உலக கோஷ்டியினருடன் அவர்களுக்கிருந்த தொடர்புகள், அதன் மூலம் அவர்கள் முன்னெடுத்த கொலை மற்றும் கொள்ளைச்சம்பவங்களை நாடே அறியும். ஆனால் அவர்கள் முன்னாள் இராணுவ வீரர்கள் என்பதால் கடந்த கால ஆட்சியாளர்கள் அதை பகிரங்கப்படுத்தாது அடக்கியே வாசிக்க வேண்டியேற்பட்டது.  

இலங்கை உள்நாட்டுப் போரின் போது நீதிக்குப் புறம்பான கொலைகள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு பேர்  மீது சொத்து முடக்கம் மற்றும் பயண தடைகளை விதித்துள்ளது பிரித்தானியா. புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புகள் இதை வரவேற்றாலும்  இலங்கையில் வழமை போன்றே படையினரின்  மீதான அபாண்ட குற்றச்சாட்டாக இது பார்க்கப்படுகின்றது.

தடை விதிக்கப்பட்டுள்ள  நான்கு பேரில் மூவர்  முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளாவர்.   ஒருவர் விடுதலை புலிகளின் முன்னாள் தளபதியாக விளங்கி பின்னர் அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட்டவர்.

தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில்  முன்னாள்  கடற்படை தளபதியான    வசந்த கரனாகொட.   பிரித்தானியாவின் இந்த செயற்பாட்டுக்கு கூறியுள்ள  காரணம் விசித்திரமாகவுள்ளது. 

‘காலனித்துவ ஆட்சி காலத்தில் தனது செயற்பாடுகளுக்கு பிரித்தானியா என்றுமே மன்னிப்பு கோரவில்லை. இந்திய மற்றும் இலங்கையில் இடம்பெற்ற காலனித்துவ கால அட்டூழியங்கள் கவனிக்கப்படாத போதும், பிரித்தானியாவானது இலங்கையை குறி வைத்து மனித உரிமை தடைகளை விதித்து வருகின்றது’ என்று அவர் கூறியுள்ளார்.

காலனித்துவ கால ஆட்சியில்  பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை காலனித்துவ ஒடுக்கு முறை என்கிறார்கள். ஆனால் இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் எந்த நாடும் இலங்கையை ஆக்கிரமித்திருக்கவில்லை. சுதந்திரம் பெற்ற ஜனநாயக நாடான இலங்கையிலேயே கோர யுத்தம் இடம்பெற்றது. இறுதி  யுத்த காலகட்டத்தில் நினைத்துப்பார்க்க முடியாத போர்க்குற்றங்கள் இலங்கை இராணுவத்தினர் மீதும் இராணுவ அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டன. இதை எவ்வாறு வசந்த கரனகொட போன்றோர் நியாயப்படுத்தப்போகின்றார்கள்?

காலனித்துவ காலத்தில் இடம்பெற்றதை விட மோசமான சம்பவங்களுக்கு இலங்கை இராணுவம் காரணமாக இருந்ததை நாட்டின் சிங்கள மக்களும் நன்கறிவர்.  

இதை நிரூபிக்கும் வகையில் சில இராணுவ அதிகாரிகள் மீது இலங்கை அரசாங்கமே நடவடிக்கை எடுத்துள்ளது.   2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிருசுவில் படுகொலை சம்பவம் அதில் முக்கியமானது. யுத்தம் காரணமாக தமது வீடுகளிலிருந்து வெளியேறிய   எட்டு பேர் யாழ்ப்பாணத்திலிருந்து மிருசுவில் சென்று கொண்டிருந்த போது இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.  . புதைக்கப்பட்ட சடலம் ஒன்றை விறகு சேகரிக்கச் சென்ற ஒருவர் கண்டு தமது உறவினர்களிடம் கூற மறு நாள் சிலர்  அவ்விடத்துக்குச் சென்று ஆராய்ந்துள்ளனர். எனினும் அங்கிருந்த எட்டு பேரை கைது செய்த இராணுவத்தினர் அவர்களை கொலை செய்து அருகிலுள்ள ஒரு வீட்டின் மலசல கூட குழியில் வீசியெறிந்துள்ளனர். இதில் சிறுவர்களும் அடங்குவர். இவர்களின் சித்திரவதைகளில் தப்பிச்சென்ற ஒருவர் வழங்கிய தகவலையடுத்தே இந்த விவகாரம் வெளிவந்தது.  ஐந்து இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. விசாரணைகளின் பின்னர் எட்டு பேரின் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. ஏனையோர் சாட்சிகள் இன்றி விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் தான் ஜனாதிபதியானவுடன் கோட்டாபய ராஜபக்ச 2020 ஆம் ஆண்டு பொது மன்னிப்பில் சுனில் ரத்னாயக்கவை விடுதலை செய்தார்.

நிறைவேற்றதிகாரமானது பிரித்தானிய காலனித்துவ அதிகாரங்களை விட கொடுமையானது என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணங்களை காட்ட முடியும்?  இலங்கை இராணுவத்தினரின் செயற்பாடுகள் எப்படியானவை என்பதை ஒரு தடவை பிரித்தானியாவே நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் இடம்பெற்றது. 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினமன்று இலண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். அச்சந்தர்ப்பத்தில் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ வெளியே வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி அலட்சியமான  உடல்மொழியை வெளிப்படுத்தியது மாத்திரமல்லாது கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் அச்சுறுத்தியிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலம்பெயர் அமைப்புகள் பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்தாலும் இலங்கை அரசாங்கமானது அவரை பாதுகாக்கும் முயற்சிகளிலேயே ஈடுபட்டது.       பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ, 1961 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டின் படி இராஜதந்திர விலக்குரிமைக்கு உட்பட்டவர் என்பதுடன் அவர் மீது பிரித்தானியா சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாது என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

  ICPPG என்ற அமைப்பு இலண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கொன்றை தொடர்ந்தது. அவர் குற்றவாளியென நீதிமன்றம் இனம் கண்டதால் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.   இலங்கை அரசாங்கமானது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கிய கடும் அழுத்தங்கள் காரணமாக  பிடியாணை மீளப்பெறப்பட்டது. எனினும் குறித்த அமைப்பு அவர் மீது மீண்டும் வழக்கு தொடர்ந்ததில்  2019 இல் அவர் குற்றவாளியென தீர்ப்பளித்த வெஸ்ட் மினிஸ்டர்  நீதிமன்றம் அவருக்கு 2400 பவுண்கள் அபராதம் விதித்தது.  இதை இலங்கை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. முன்னதாக நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்த பிரியங்க பெர்னாண்டோ பின்னர் மேஜர் ஜெனரல் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டார்.

மட்டுமின்றி    அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையை செலுத்துவதற்கு நாட்டு மக்களிடம் பணம் சேகரிக்கும் முயற்சிகளும் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பிரியங்கவுக்கு ஆதரவாக அப்போது அட்மிரல் வசந்த கரனகொட ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்திருந்தார். பயங்கவாதத்தை ஒழிப்பதற்கு தியாகங்கள் செய்த ஒத்துழைப்பு நல்கிய இராணுவ அதிகாரிகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு ஆதரவாக செயற்படவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது அவர் கூறியிருந்தார். இப்போதும் அதையே கூறுகின்றார்.

பிரித்தானியாவால் தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியான சவேந்திர சில்வா மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனகொட ஆகியோர்  மீது ஏற்கனவே அமெரிக்காவானது     பயணத்தடைகளை விதித்துள்ளமை முக்கிய விடயம். யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சவேந்­திர சில்வா அமெரிக்­காவில் அமைந்­துள்ள ஐ.நா. தலை­மை­ய­கத்தில் இருக்கும் இலங்­கையின் நிரந்­தர வதி­விடப் பிர­தி­நி­தியின் அலு­வ­ல­கத்தில் துணைத் தூது­வ­ராக பணி­யாற்­றி­யி­ருந்தார். அவர் இலங்கை திரும்பி இராணுவத் தளபதியாக பொறுப்பேற்று ஆறு மாதங்களில் 2020 ஆம் ஆண்டு அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டது.   முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனகொடவுக்கு  2023 ஆம் ஆண்டு பயணத்தடை விதிக்கப்பட்டது.  2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வசந்த கரனகொட மீது வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் முக்கிய விடயம்.

தடை விதிக்கப்பட்டுள்ள ஜகத் ஜெயசூரிய மற்றும் வசந்த கரனகொட ஆகியோர் மீது முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார். 2021 ஆம் ஆண்டு அவர் பாராளுமன்று உறுப்பினராக இருந்த போது, பாதுகாப்பு அமைச்சின் மீதான விவாதத்தில் மேற்கூறிய இருவரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் குற்றமிழைத்தவர்கள். இராணுவத்தின் ஒரு சில அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு முழு இராணுவத்தையும் போர்க்குற்றவாளிகளாக்க முடியாது. ஆகவே அவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அநுர அரசாங்கமும் இவர்கள் மீதான தடையானது ஒரு தலைப்பட்சமானது என்று கூறியுள்ளது.  ஆனால்  பிரித்தானியாவின் இந்த தடை விவகாரத்தை தனது எழுச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளப்பார்க்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த. யுத்தத்தை நடத்தியது மட்டுமல்லாது தீர்மானங்களை எடுத்தது நானே ! அதை அமுல்படுத்திய பணிகளை செய்தது மாத்திரமே இராணுவ அதிகாரிகள் என்று அவர் கூறியதன் மூலம் போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கும் தானே பொறுப்பு என்ற அர்த்தத்தில் சிங்கள பெளத்த மக்களையும் இராணுவத்தினரையும் ஈர்க்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். போர்க்குற்றங்களை சுமந்து நின்ற  அதிகாரிகளுக்கு தனது காலத்திலேயே பதவி உயர்வுகள் வழங்கியவர் மகிந்த. இப்போது மிகவும் கீழிறங்கி தனது அரசியல் இருப்புக்காக தனது உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்த தயாராகின்றார்.  

இவர்கள் அனைவருமே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஏதாவதொரு வழியில்   பலவீனமடையச்செய்யும் தருணத்துக்காக காத்திருப்பவர்கள். இப்போது பிரித்தானியாவின் பயணத்தடை விவகாரம் அவர்களுக்கு வெறும் வாய்க்கு அவலாக  கிடைத்துள்ளது.   போர்க்குற்றங்களை சுமந்து நிற்கும் இராணுவத்தினரை  விட, அவர்களுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்த    சூத்திரதாரிகளே தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.

 

 

 

 

  


 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் –2025

உறுப்பினர்களிடம் வாக்காளர்கள் எதிர்ப்பார்ப்பது என்ன?




எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் தமது பிரதேசத்துக்கு என்ன வகையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிடும் பிரதேச மக்கள் முதலில் அவர் என்னென்ன குணாதியசங்களையும் தகுதிகளையும் கொண்டிருத்தல் வேண்டும் என்பது குறித்தும் பேசத் தலைப்பட்டுள்ளனர். கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி நுவரெலியா சம்பத் விருந்தகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வுகள் இடம்பெற்றன. நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெ.முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திட்டப் பணிப்பாளர் கே. யோகேஷ்வரி , திட்ட அதிகாரி கிருஷாந்தினி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

சிரேஷ்ட பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் பிரதேச சபை சட்டத் திருத்தம் பற்றியும் தகவல் அறியும் சட்டம் ஊடாக உள்ளூராட்சி நிறுவனங்களிடம் எப்படியான தகவல்களைப் பெறலாம் என்பது குறித்தும் உரையாடினார். இந்நிகழ்வில் உரையாற்றிய பெ.முத்துலிங்கம் பிரதேச இளைஞர் யுவதிகள் மற்றும் ஏனைய தரப்பினர் சமூக மாற்றத்தை ஏற்படுத்துதல் பற்றி சிந்திப்பது மாத்திரமன்றி அதை உருவாக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கக் கூடிய அரசியல் பிரமுகர்களிடம் கேள்விகளை எழுப்ப வேண்டும்.

தற்போது இலங்கையில் மாத்திரமின்றி மலையகத்திலும் தேர்தல் கால வேட்பாளர்களை தெரிவு செய்வதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. ஆரம்ப காலத்தில் பாராளுமன்றத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு மக்களுக்கு பரீட்சியமானோர் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்படுவர். அவர்கள் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்களாகவும் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் மக்களால் மதிக்கத்தக்கவர்களாகவும் இருப்பர். மிக முக்கியமாக மக்களால் விரும்பி தெரிவு செய்யப்படும் நபர்களாக விளங்குவர்.ஆனால் இப்போது அப்படியில்லை. மக்களுக்கு தெரியாத நபர்களை கட்சிகள் தான் வேட்பாளர்களாக நியமிக்கின்றன. அவர்கள் யார் எவர் எங்கிருந்து தமது பிரதேசத்துக்கு வந்தார் அவரது பின்னணி என்ன என்பது குறித்து மக்களுக்குத்தெரிவதில்லை. ஆனால் வேறு வழியின்றி அவர்கள் வாக்களிக்கின்றனர்.

ஆகவே இந்த கலாசாரம் மாறுவதற்கு நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அந்த உரிமை உங்களிடம் உள்ளது’ என்றுத் தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் நுவரெலியா,வலப்பனை,தலவாக்கலை,கொத்மலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து பல மன்றங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் துடிப்பான இளைஞர் யுவதிகள் மற்றும் பிரமுகர்கள் ஆர்வமாக பங்குபற்றியிருந்தனர்.



பசுமை கிராம அபிவிருத்திமன்றம், அதிஷ்ர்டநட்சத்திரம் சமூக அபிவிருத்தி மன்றம், பொழி சமூக அபிவிருத்திமன்றம், கல்கி சமூக அபிவிருத்தி மன்றம், தமிழ் தாரகை சமூக அபிவிருத்தி மன்றம், அரும்பு சமூக அபிவிருத்தி மன்றம், கோல்டன் சமூக அபிவிருத்தி மன்றம், நாவலர் சமூக அபிவிருத்தி மன்றம். உதவும் கரங்கள் சமூக அபிவிருத்தி மன்றம், ஹெதர்செட் சமூக அபிவிருத்திமன்றம், பகலவன் சமூகஅபிவிருத்திமன்றம், குறிஞ்சி சமூக அபிவிருத்தி மன்றம், சக்தி பெண்கள் அபிவிருத்தி மன்றம், யுனைட்டட் சமூக அபிவிருத்தி மன்றம், மலையருவி சமூகஅபிவிருத்தி மன்றம், கொன்கோடியா சமூக அபிவிருத்தி மன்றம் ஆகிய அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் கலந்து கொண்டு காத்திரமான கருத்துக்களை முன்வைத்திருந்தனர். மிக முக்கியமாக சில கட்சிகள் சார்பில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு தலைப்புகளின் கீழ் தத்தமது கருத்துக்களை முன்வைக்கும் படி கோரப்பட்டிருந்தது.

1) எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரிடம் நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்ன?

2) வேட்பாளரின் தகுதிகள் மற்றும் குணாம்சங்கள் எப்படி இருக்க வேண்டும்?

மேற்படி தலைப்பில் குழுக்கள் முன்வைத்த கருத்துகள் இங்கு தொகுத்து தரப்படுகின்றன.வேட்பாளரின் தகுதிகள் மற்றும் குணாம்சங்கள் வேட்பாளர் முதலில் உரிய கல்வித் தகைமை உடையவராக இருத்தல் அவசியம். அதை விட ஊழலை எதிர்க்கக்கூடியவராகவும் சமூகத்திற்கு சேவை செய்ப்பவராக இருத்தல் வேண்டும். தனக்கு வாக்களித்த மக்களிடம் புரிந்துணர்வுடன் நடத்தல் அவசியம். சுயநலம் இல்லாமல் பொதுநலம் பேணுபவராகவும் மூகத்தில் நன் மதிப்பைபெற்றவராக இருக்கும் அதே வேளை பேச்சுத்திறனும் மக்களிடம் முறையான தொடர்பாடலை மேற்கொள்பவராகவும் இருத்தல் அவசியமாகும். குறித்த வேட்பாளர் தான் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபை குறித்த சட்டங்களை அறிந்திருத்தல் வேண்டும். அதன் மூலமாக அரச சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பவராக இருத்தல் வேண்டும்.

பக்கச் சார்பு இல்லாமல் மக்களுக்கு சேவைகளை வழங்க வேண்டிய அதே நேரம் தனது தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் பற்றிய தெளிவினை கொண்டிருந்தல் வேண்டும்.

2018 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க பிரதேசசபைகள் (திருத்தச்) சட்டம் ஏன் வந்தது ? எதற்காக வந்தது? யாருக்காக மாற்றப்பட்டது என்பது குறித்து தெளிவைப் பெற்று தோட்டப்புற அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்பவராக இருத்தல் வேண்டும்.

எதிர்ப்பார்ப்பது என்ன?

பெருந்தோட்டப் பாதைகள் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டதாகவே உள்ளன.பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அக்கறை காட்டாத இவ்விடயத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அக்கறை காட்ட வேண்டும். பிரதேசங்களில் அரச முன்பள்ளிகளை அமைத்துக்கொடுத்தல், ட்டவைத்தியசாலைகளில் தேவையானஅளவு வைத்தியர்களை நியமித்தல் மற்றும் அபிவிருத்திசெய்தல், அரச போக்குவரத்து சேவைகளை விஸ்தரித்தல், கர்ப்பிணிபெண்களுக்குசிறந்தசுகாதாரசேவைகளைபெற்றுக்கொடுத்தல், விளையாட்டு மைதானங்களை அமைத்தல் – புனரமைத்தல், வாசிகசாலைகளை அமைத்து வாசிப்பைஊக்குவித்தல் , தொழிற்பயிற்சிதிட்டங்களைஉருவாக்குதல் ,வீதிகளுக்கு மின் விளக்குகளைப் பொருத்துதல், கழிவு முகாமைத்துவத்தினை முறையாக மேற்கொள்ளல், சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தல் என்பன பிரதான கோரிக்கைககளாக முன்வைக்கப்பட்டன. மலையகப் பெருந்தோட்டப் பெண்களின் பிரச்சினைகள் குறித்து இங்கு பேசப்பட்டன. முக்கியமாக தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு மலசல கூடங்கள் மற்றும் மாதவிலக்கு காலங்களில் அவர்களுக்கு உடுதுணிகளை மாற்றிக்கொள்வதற்குக் கூட தேயிலை மலைகளில் வசதிகள் இல்லாதது குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேலும் சிறுவர் பூங்காக்களைஅமைத்தல்,விவசாயப்பயிர்ச்செய்கைக்குஉதவுதல், பொதுசுகாதாரம் தொடர்பாக கரிசனை காட்டுதல் ,வறியவர்களுக்கான வீடமைப்பு திட்டத்தினை கொண்டுவரல், தொழிற்சாலை மற்றும் வியாபார வலையமைப்புக்களை உருவாக்குதல், குடியிருப்புகள் மற்றும் தேயிலை மலைகளில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றுதல், யதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தல் ,உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருதல் ,சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அமைத்தல் , கலாச்சார அபிவிருத்தி மன்றங்களை ஊக்குவித்தல் மயான பூமிகளை அமைத்து முறையான பராமரிப்பினை உறுதிசெய்தல் போன்ற விடயங்களை இவர்கள் முன்வைத்திருந்தனர். எதிர்வரும் தேர்தலை முன்னிட் மலையகப் பிரதேசங்கள் தோறும் இவ்வாறான பயிற்சி கருத்தரங்குகளை நடத்தி உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கண்டி சமூக அபிவருத்தி நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெ.முத்துலிங்கம் இதன் போது தெரிவித்தார்.

Wednesday, April 2, 2025

  காதலர் தினம்–  பஸ் கதைகள்– 1

 


  

திகதி 14/02/2005
காலை 9.30


…நுவரெலியா செல்லும் பஸ்ஸில் ஏறினேன். சாளர ஓர இருக்கையில் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி என்னை கண்டதும் புன்னகை செய்தார். இதற்கு முன்னர் அவரை நான் கண்டதில்லை. சிவந்த நிறம். பட்டுப்புடவை அணிந்திருந்தார். ஏதோ ஒரு உந்துதலில் அவரின் அருகில் அமர்ந்தேன்.

அம்மா நுவரெலியா போறிங்களா?
ஆமா….நீங்க ?
நானும் அங்க தான். உங்கள நான் இதுக்கு முன்ன சந்திச்சதில்லையே ஆனா பார்த்த மாறி இருக்கு..

இந்த உலகத்துல எல்லாரும் எப்பவோ சந்திச்சிருப்போம் தம்பி. ஆனா ஒருத்தர் மாத்திரம் தான் முகத்த பாத்திருப்பாங்க. மத்தவங்க ஏதோ யோசனையில அவங்கள கடந்து சென்றிருப்பாங்க…

 அப்போ நீங்கள் என்ன எப்போதாவது பாத்திருக்கிங்களா?

இல்ல தம்பி. சிலர பார்த்தவுடனே புன்னகையால கடந்து செல்வோம் இல்லியா அப்படித்தான்... .


நுவரெலியாவில உறவினர்கள் இருக்காங்களா அம்மா? உங்க கணவர் பிள்ளைகள்?

கணவர் இறந்து விட்டார். பிள்ளைகள் திருமணம் முடித்து வெளிநாட்டில செட்டிலாகிட்டாங்க. நான் எனது இறுதி காலத்த வாசிப்பு, ஆன்மிகம்னு கொண்டு போய்க்கிட்டிருக்கேன்.
பஸ் நகர ஆரம்பித்தது. அந்த அம்மாவுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது.


‘அப்போ இன்றைக்கு நுவரெலியா காயத்ரி ஆலயம் போகின்றீர்களா அம்மா?


‘இல்ல தம்பி நான் இன்றைக்கு என்னோட போய் பிரண்ட பாக்க போய்கிட்டிருக்கேன்…


சிரிப்புடன் அவர் கூறியதும் முதலில் தூக்கி வாரி போட்டது. பின்பு ஏதோ நகைச்சுவை சொல்லியிருப்பார் என நினைத்தேன்.


'என்ன தம்பி ஜோக்குனு நினைச்சிங்களா?அதான் உண்மை. நாற்பது வருஷத்துக்கு முன்பு எனது 23 வயசில அவர் என்ன பெண் பார்க்க வந்திருந்தார். ஆனால் நாம் இருவரும் வாழ்க்கையில் இணைய முடியவில்லை. ஆனால் அவரை பார்த்த நாள் முதல் என் மனதில் பூத்த காதலை என்னால் மறக்க முடியவில்லை. அவராலும் தான். அவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நீங்க நம்பினா நம்புங்க தம்பி…..அவரை நான் 40 வருஷத்துக்குப் பிறகு இப்ப தான் பாக்க போறேன்.
அடுத்தடுத்து ஆச்சரியங்களை ஏற்படுத்தினார் அவர்.


நீங்க என்ன அம்மா சொல்றிங்க…..ஏன் உங்கள் திருமணம் நடக்கவில்லை? நான் இப்படி கேட்பதால் உங்களுக்கு கோபம் இல்லியே?


இல்லை தம்பி….உங்களிடம் சொல்ல வேண்டும் போல தோன்றியது. சொல்கிறேன். இப்ப அவரை நுவரெலியாவுக்கு பார்க்க போறதுக்கு ஒரு காரணம் இருக்கு தம்பி. அவரும் நானும் இணையாமல் போனதுக்கு அந்த நகரமும் அங்க நடந்த ஒரு சம்பவமும் ஒரு காரணம்.


1965 ஆம் ஆண்டு....அப்போது எனக்கு 23 வயது. என்னை பெண் பார்க்க அவர் வந்த நாள் பெப்ரவரி 14 தம்பி. அவர் குடும்பத்துடன் வந்திருந்தார். எமது ஊர் நானுஓயா. அவர்கள் மிகவும் கட்டுப்பாடான கூட்டுக்குடும்பத்தினர். அவர் தலை நிமிர்ந்து ஒரு தடவை தான் என்னைப்பார்த்தார். அவரின் சகோதரிகள் தான் என்னை சூழ்ந்து கொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்தனர். எனது அழகு அவர்களை பொறாமைப்படுத்தியதோ தெரியவில்லை. அவர்கள் சென்று விட்டனர். ஆனால் அவர் மட்டும் என் மனதில் குடி கொண்டு விட்டார்.
பின்னர் எனது அப்பாவிடம் முகவரி அறிந்து அவருக்கு கடிதம் எழுதினேன். எனக்கு நீண்ட நாட்களுக்குப்பிறகே பதில் கிடைத்தது. அது நாள் வரை நான் அவரை நினைத்து ஏங்கிய பொழுதுகள் அதிகம் தம்பி. அப்போது தொடர்பு கொள்ளக் கூடிய வசதிகள் இல்லை. அவரது கடிதத்தில் என்னை நலம் விசாரித்து அன்பை கொட்டியிருந்தார். தனது சகோதரிகள் இருவர் இன்னும் திருமணமாகாது இருப்பதால் அவர்களை கரையேற்றி விட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதாகவும் தனக்கு வந்த கடிதத்தையே மறைத்து விட்டதாகவும் எழுதியிருந்த அவர் தற்செயலாக இக்கடிதம் தனது கைக்கு கிடைத்ததாகவும் அது இருவர் மனதிலும் பூத்த காதலின் வலிமை என்றும் கூறியிருந்தார். தனது நண்பர் ஒருவரின் முகவரியை அதில் குறிப்பிட்டு இனி அந்த முகவரிக்கு கடிதம் எழுதச் சொன்னார்.
சரி அம்மா பிறகு?
பிறகென்ன…சுமார் எட்டு மாதங்கள் கடிதங்கள் மூலமாகவே எமது காதலை வளர்த்தோம். அவரது தங்கைகள் இருவருக்கும் திருமண பேச்சு நடப்பதாகவும் 66 ஆம் ஆண்டு தை மாதம் எமது திருமணத்தை செய்யலாம் என்றும் அவரது தந்தையார் எமது தந்தைக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அது என்ன அம்மா எட்டு மாதங்கள், அதற்குப்பிறகு என்ன நடந்தது?
தம்பி..எனது அழகு குறித்த ஒரு பெருமை எனக்கிருந்தது. ஆனால் கர்வமில்லை. ஏதாவது ஒரு அழகிப்போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அது.
அப்போது தான் ராதா என்ற பத்திரிகை மலையக லஷ்மி என்ற பெயரில் ஒரு அழகு ராணி போட்டியை நடத்துவதாக அறிவித்தல் விட்டிருந்தது.
அந்தப் போட்டியில் வெற்றியீட்டும் பெண், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் கைகளால் கிரீடம் சூட்டப்படுவார் என்றும் அறிவித்திருந்தது. எனது தந்தையார் பயங்கரமான எம்.ஜி.ஆர் இரசிகர். விடுவாரா? அம்மா நீ கட்டாயம் இந்த போட்டியில கலந்துக்கனும் நிச்சயமாக நீ வெற்றி பெறுவ….அதுவும் வாத்தியார் கைகளில் பரிசு வாங்கவும் போற என எனது ஆழ்மனது ஆசைகளையும் தூண்டி விட்டார்.
நான் விண்ணப்பத்தை பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன்.
நான் இது குறித்து அவருக்கு கடிதம் எழுதினேன். போட்டி இடம்பெறும் நாளில் நுவரெலியாவுக்கு கட்டாயம் வருவேன். நீ தான் மலையக அழகு ராணி. உன்னை மனைவியாக அடையப்போவது எனக்கு பெருமை என பதில் கடிதம் எழுதியிருந்தார்.
பரபரப்பு அதிகமாகவே நான் ‘ போட்டி நடந்ததா நீங்கள் வெற்றி பெற்றீர்களா அம்மா’ என ஆர்வமாகக் கேட்டேன்.
எம்.ஜி.ஆரோடு நடிகை சரோஜா தேவியும் வந்திருந்தார். அடேயப்பா…. நுவரெலியா நகரில் கால் வைப்பதற்கு இடமில்லை தம்பி. போட்டியாளர்களுக்கு தனியாக மேடையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நினைத்தது போன்றே நான் வெற்றி பெற்று விட்டேன். இலட்சோப இலட்சம் பேரின் மனதில் குடி கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர் கைகளில் கிரீடம் சூட்டப்பட்டேன்.
எனக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாக இல்லை …. அந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நான் என்னவரை தேடினேன் தம்பி.
அவர் எங்கோ ஓரிடத்திலிருந்து கொண்டு என்னை பார்க்கிறார் என்பதை மனஉணர்வில் விளங்கிக் கொண்டேன். அனைவரும் வாழ்த்து கோஷம் எழுப்பினர்.
எனக்கு அந்த நேரத்திலேயே 5 ஆயிரம் பரிசுப்பணம் கிடைத்தது. போட்டி முடிந்ததும் மேடையில் கீழே நானும் எனது குடும்பத்தினரும் இருக்குமிடம் தேடி வந்தார் அவர்.
சட்டைகள் கசங்கி தலை கேசம் எல்லாம் கலைந்து சிரித்தபடியே வந்து எனக்கு கைகுலுக்கினார். கண்களால் பல கதைகள் பேசினோம். பின்னர் வேதனையோடு வீடு சென்றோம்.
அதன் பிறகு நடந்ததெல்லாம் கனவு போலுள்ளது தம்பி. இந்த போட்டியில் கலந்து கொண்டதால் நான் குடும்பப் பெண் என்ற அந்தஸ்த்தை இழந்து விட்டேன் என்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு இது சரி வராது என்றும் அவரது தங்கைகள் சண்டை போட்டதாகவும் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையென்றும் கடிதம் எழுதியிருந்தார்.
அப்பாவுக்கு அவரது தந்தை தனியாக கடிதம் எழுதியிருந்தார்.
அது தான் அவரிடமிருந்து வந்த இறுதி கடிதம் தம்பி..
அவரது நிலைமை எனக்கு விளங்கியது. ஏன் இந்த போட்டியில் கலந்து கொண்டோம் என நினைத்தேன். அப்பாவும் கலங்கிப் போனார்.
நான் தான்மா உன் வாழ்க்கைய பாழடிச்சிட்டேன் என அழுதார். எல்லாம் விதிப்படி தானே நடக்கும்?
காலங்கள் ஓடி விட்டன தம்பி. அவர் திருமணம் முடித்து விட்டதாக அறிந்தேன். எனக்கும் திருமணம் நடந்தது. இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். கணவர் ஒரு விபத்தில் காலமாகி விட்டார். நான் கடிதம் எழுதிய முகவரிக்கு சொந்தகாரரான அவரது நண்பர் என்னை தொடர்பு கொண்டு என்னை அவர் பார்க்க விரும்புவதாக கூறினார்.
இதோ போய்க் கொண்டிருக்கிறேன். என் மனதில் முதல் காதலை விதைத்த அவரை 40 வருடங்களுக்குப்பிறகு பார்க்கப் போகின்றேன். அந்த குரலை கேட்கப்போகின்றேன்....
ரதல்ல குறுக்கு வழியாக பஸ் போய்க்கொண்டிருந்தது. அவரது கதையை கேட்டு சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டேன்.
இனம் புரியாத வேதனையோடு ஒரு ஆனந்த நிலையும் ஏற்பட்டது. ஆஹா என்ன அருமையானதொரு காதல் கதை. இந்த காதல் உணர்வை என்னவென்று சொல்வது? இத்தனை வருடங்களுக்குப்பிறகு சந்திக்கப்போகும் அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் ? அதை காண கண் கோடி வேண்டுமே…
நானும் இருக்கின்றேனே. சாந்தினியின் ஞாபகம் வந்தது. காதல் திருமணம் தான். ஆனால் இருவருக்குமிடையில் புரிந்துணர்வு இன்மையால் இறுதியில் விவாகரத்தில் முடிந்தது. அவளைப் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.
பழைய நினைவுகளில் இருந்து விடுபட்டேன்.
'அம்மா தப்பா நினைக்காதிங்க….நானும் உங்களோட வந்து அவரை சந்திக்கலாமா?
நீங்களும் என்னுடன் வந்தால் அவருக்கு சங்கடமாக இருக்கும் தம்பி. வேண்டுமானால் இடத்தை கூறுகிறேன். அங்கு வந்து தெரியாதது போன்று நில்லுங்கள். அது வேற எந்த இடமுமில்லை. விக்டோரியா பூங்காவுக்கு போகும் பழைய வழி.  அவ்விடத்தில் தான் அழகு ராணி போட்டி நடந்தது.


பஸ் நுவரெலியாவை அடைந்தது. நானும் இறங்கிச் சென்றேன். அவர் எனக்கு கையசைத்தவாறு நடந்து சென்றார். மனதில் எக்காலத்திலும் இப்படி ஒரு ஆர்வமும் சந்தோஷமும் எனக்கு ஏற்பட்டதில்லை.


அவ்விடத்துக்கு சற்று தள்ளி நின்று கொண்டேன்.


அம்மா தனது கையடக்கத்தொலைபேசியை எடுத்து யாருடனோ கதைத்தார். முகத்தில் புன்னகை. பின்பு அங்குமிங்கும் நோட்டமிட்டார் அவரை நோக்கி ஒரு உருவம் வந்தது….


நான் எனது உணர்வுகளை அடக்கிக்கொண்டேன். இருவரும் சிறு பிள்ளைகள் போன்று கைகளை பிடித்துக்கொண்டனர். அம்மாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்திருக்க வேண்டும். துடைத்துக்கொண்டார்.


அட …ஏன் எனக்கு கண்கள் கலங்குகின்றன? நான் அழுகின்றேனா? உதட்டை கடித்து என்னை அடக்குகின்றேன்...


பின்பு இருவரும் சகஜ நிலைமைக்கு திரும்பினர். 40 வருடங்களுக்கு முன்பு அழகு ராணியை பார்க்க வந்தவருக்கும் இப்போதுள்ளவருக்கும் எவ்வளவு வித்தியாசங்கள். அவர் கைகளில் என்னவோ கொண்டு வந்திருந்தார்.


அதை வழங்கினார். 10 நிமிடங்கள் தான். அவர் அப்பால் சென்று விட்டார். போகும் போது கண்ணாடியை கழற்றி கண்களை துடைத்துக்கொள்வது விளங்கியது. நடையில் சிறிது தள்ளாட்டம். அவர் போகும் வரை பார்த்துக்கொண்டிருந்த அம்மா என்னை நோக்கி வந்தார்.

'அம்மா ஏன் அவரது தொலைபேசி இலக்கத்தை வாங்கவில்லை?

அதில் கதைப்பதை விட மனதுக்குள் நாம் கதைத்துக்கொள்வது அற்புதமானதப்பா….இத்தனை வருடங்கள் நான் அப்படித்தான் அவருடன் கதைத்தேன்.. அது சரி நீ ஏனப்பா கண்ணீர் விடுகின்றாய்? எனது கதை அந்தளவுக்கு உன்னை பாதித்து விட்டதா?

'இல்லை …இல்லை அம்மா….கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு'….

.நான் சமாளித்துக்கொண்டேன்.

'அம்மா உங்க இலக்கத்தை தாருங்கள்… உங்கள் பெயர் என்னம்மா?

'என் பெயர் ராஜம்மாள் . உங்க பெயர் என்ன தம்பி?

நான் குமார்.

தம்பி குமார் ….நீ ஏனப்பா அவர் பெயரை கேட்கல்ல….கேட்டாலும் நான் சொல்ல மாட்டேனே….அது கடவுளோட பெயர் தம்பி.

'தம்பி நான் அடுத்த வாரம் எனது மகனோடு தங்குவதற்கு அமெரிக்கா போகிறேன். இனி வருவதாக இல்லை. தனியாக இருக்க முடியாது தம்பி. நான் சாவதற்கு முன்பு அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என நினைத்தேன். பார்த்து விட்டேன். விமானத்தில் போகும் போது அப்படியே எனது உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை....

அப்படி சொல்லக்கூடாது அம்மா. நான் உங்களுடன் கதைக்கிறேன்.

இனிய காதலர் தின வாழ்த்துகள் அம்மா…

அவரது முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி…காதல்..ஆனந்தம் , கண்களில் பரவசம். ' தேங்க்யூ ராஜா...என என் கைகளை இறுக பற்றி விடைபெற்றார் ராஜம்மா.

முதலில் சாந்தினியுடன் கதைக்க வேண்டும் என தீர்மானித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.
'தம்பி நீ கேட்டாலும் அவரோட பெயர நான் சொல்ல மாட்டேனே…....

.மலையக அழகு ராணி ராஜம்மாவின் குரல் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது….
என் அப்பாவின் பெயரை நீங்கள் கூற வேண்டுமா அம்மா….

அப்பா.....ஏனப்பா இத்தனை நாட்கள் இந்த கதையை எனக்கு கூறவில்லை.....கண்ணீரை துடைத்துக்கொண்டே நடந்தேன்.

 இன்று அப்பாவுக்கு ஒரு நல்ல காதலர் தின கிப்ட் வாங்கிக் கொண்டு போக வேண்டும்.